பின்னால்

வழிகாட்டி · GST

GSTR-2B reconciliation: கொள்முதல் கணக்கையும் ITC-யையும் மாதா மாதம் சரிபார்ப்பது

ITC வேறுபாடுகள் அவசரமாவதற்கு முன், GSTR-2B, கொள்முதல் பதிவேடு, IMS நடவடிக்கைகளை ஒவ்வொரு ஆவணமாக ஒப்பிடும் மாதாந்திர வழிமுறை.

பூவராகவன் & கோ, செலவுக் கணக்காளர்கள்செப்டம்பர் 20266 நிமிட வாசிப்புசரிபார்த்தது: செப்டம்பர் 2026

சுருக்கமாக

யாருக்குப் பொருந்தும்: ITC எடுக்கும், GST பதிவு பெற்ற தொழில்கள்

  • ரிட்டர்ன் கெடு வரும்போது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் GSTR-2B-ஐக் கொள்முதல் பதிவேட்டுடன் இன்வாய்ஸ் வாரியாக ஒப்பிடுங்கள்.
  • ஒரு இன்வாய்ஸ் GSTR-2B-இல் தோன்றுவதாலேயே, IMS-இல் (Invoice Management System) தானாக ஏற்கப்பட்டதாகக் கருதப்பட்டதாலேயே, அதற்கு ITC தகுதி உண்டு என்று ஆகாது. அதை IMS-இல் பார்த்து, எடுத்த நடவடிக்கையைப் பதிவு செய்யுங்கள்.
  • ஒவ்வொரு வேறுபாட்டுக்கும் ஒரு பொறுப்பாளரையும் முடிக்கும் தேதியையும் ஒதுக்குங்கள்; மத்திய சரக்கு, சேவை வரிச் (CGST) சட்டப் பிரிவு 16(4) கால வரம்பை நெருங்கும் இனங்களை மேலிடத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.

ரிட்டர்ன் கெடுவின்போது மட்டும் பார்க்கும் ஒன்றாக இல்லாமல், மாத இறுதி முடிப்பு வேலையின் ஒரு பகுதியாக ஆகும்போதுதான் GSTR-2B அதிகம் பயன்படுகிறது.

பல தொழில்களுக்குச் சிக்கல் GSTR-2B-இல் உள்ள எண் அல்ல. அந்த எண் ஏன் கொள்முதல் பதிவேட்டுடனோ, ITC ledger-ஓடோ, ரிட்டர்னில் கோர இருக்கும் தொகையுடனோ ஒத்துப்போகவில்லை என்று விளக்குவதுதான் சிக்கல். தாமதமான ஒப்பீடு, சாதாரண சப்ளையர் பின்தொடர்தலை நேர நெருக்கடிப் பிரச்சினையாக மாற்றிவிடும்.

எளிய மாதாந்திர வழிமுறை, வேறுபாடுகளை முன்கூட்டியே கண்ணுக்குக் கொண்டுவரும்.

நான்கு பதிவுகளுடன் தொடங்குங்கள்

ஒரே வரிக் காலத்துக்கான இந்தப் பதிவுகளைக் கையில் வையுங்கள்:

  • கொள்முதல் பதிவேடு அல்லது கணக்கு மென்பொருளிலிருந்து எடுத்த பட்டியல்
  • GST இணையதளத்திலிருந்து பதிவிறக்கிய GSTR-2B
  • இன்வாய்ஸ் மேலாண்மை அமைப்பு (IMS) நிலையும் எடுத்த நடவடிக்கையும்
  • ஒப்பீட்டு வேலைத் தாள்

வேலைத் தாளில் குறைந்தபட்சம் இவை இருக்க வேண்டும்:

  • சப்ளையரின் GSTIN (GST அடையாள எண்), பெயர்
  • இன்வாய்ஸ் எண், தேதி
  • வரிக்குட்பட்ட மதிப்பு, வரித் தொகைகள்
  • இன்வாய்ஸ் GSTR-2B-இல் தோன்றுகிறதா
  • IMS-இல் எடுத்த நடவடிக்கை, தேதி
  • வேறுபாடு இருந்தால் அதன் காரணம்
  • நடவடிக்கைப் பொறுப்பாளர், முடிக்க எதிர்பார்க்கும் தேதி

நோக்கம் ஒரு மொத்தத்தை அடைவது மட்டும் அல்ல. ஒருவர் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஒவ்வொரு விதிவிலக்கையும் தெளிவாக அடையாளம் காண்பதே.

அடிக்கடி வரும் வேறுபாடுகள்

இன்வாய்ஸ் புத்தகத்தில் உள்ளது, GSTR-2B-இல் இல்லை

சப்ளையர் உரிய அறிக்கையைத் தாக்கல் செய்யாததால், தாமதமாகத் தாக்கல் செய்ததால், அல்லது ஆவணத்தைப் பிழையுடன் பதிவு செய்ததால் இது நிகழலாம்.

கணக்குக் குழு, கொள்முதல் ஆவணத்தையும் பொருள் பெற்றதற்கான ஆதாரத்தையும் வைத்திருக்க வேண்டும். கொள்முதல் அல்லது கணக்குக் குழு சப்ளையரைத் தொடர்புகொண்டு, ஆவண விவரங்களை உறுதி செய்து, பின்தொடர்தலை முடிவு வரை கண்காணிக்க வேண்டியிருக்கலாம்.

இன்வாய்ஸ் GSTR-2B-இல் உள்ளது, புத்தகத்தில் இல்லை

இங்கேதான் இன்வாய்ஸ் மேலாண்மை அமைப்பைக் கவனிக்க வேண்டும்.

GSTR-2B உருவாகும் முன் ஒரு பதிவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், GSTN-இன் (GST இணையதளத்தை இயக்கும் GST நெட்வொர்க்) IMS அறிவுறுத்தல்படி அது தானாக ஏற்கப்பட்டதாகக் கருதப்படும். இதனால், தொழிலில் யாரும் பார்க்கும் முன், பதிவு செய்யும் முன்பே ஒரு இன்வாய்ஸ் GSTR-2B-இல் தோன்றலாம். தோன்றுவதாலேயே ITC தகுதி உறுதியாகாது; அடிப்படைப் பரிவர்த்தனையையும் சட்ட நிபந்தனைகளையும் இன்னும் பார்க்க வேண்டும்.

ஒரு இன்வாய்ஸைக் கணக்கில் விடுபட்டது என்றோ, தகுதியான வரவு என்றோ கருதும் முன், அதை IMS-இல் பார்த்து, இணையதளத்தின் தற்போதைய வழிமுறைப்படி உரிய நடவடிக்கை எடுங்கள். ஒப்பீட்டுத் தாளில் IMS நிலை, கணக்கு முடிவு, பின்தொடர்தல் பொறுப்பாளர் எல்லாம் பதிவாக வேண்டும்.

IMS வந்த பின், ஒப்பீடு என்பது கொள்முதல் பதிவேட்டையும் GSTR-2B-ஐயும் ஒப்பிடுவதோடு முடிவதில்லை. அது ஒரு கூடுதல் செயல்பாட்டுப் படியைச் சேர்க்கிறது: ஆவணத்தை அடையாளம் காண்பது, அந்த விநியோகம் தொழிலுக்குரியதா என்று உறுதி செய்வது, உரிய நடவடிக்கையை முடிவு செய்வது, அந்த முடிவுக்கான ஆதாரத்தை வைத்திருப்பது.

GSTIN, இன்வாய்ஸ் எண் அல்லது வரித் தொகை வேறுபடுகிறது

சிறிய தரவுப் பிழைகள் பெரிய ஒப்பீட்டு வேலையை உருவாக்கும். சப்ளையர் தவறான GSTIN-ஐப் பயன்படுத்தியிருக்கலாம், இன்வாய்ஸ் எண்ணை வேறுவிதமாக எழுதியிருக்கலாம், அல்லது தவறான வரிக்குட்பட்ட மதிப்பைப் பதிவு செய்திருக்கலாம்.

வேறுபாட்டை ஆவண அளவில் வையுங்கள். சப்ளையர்வாரி மொத்தம் ஏதோ தவறு என்று காட்டலாம்; ஆனால் எதைத் திருத்த வேண்டும் என்று பொதுவாகச் சொல்லாது.

கடன் குறிப்புகள், பற்றுக் குறிப்புகள், திருத்தங்கள்

கடன் குறிப்புகள் (credit notes) வரி நிலையைப் பாதிக்கலாம்; அவற்றைச் சாதாரணக் கொள்முதல் இன்வாய்ஸ்களுடன் கலக்கக் கூடாது. கடன் குறிப்புகள், பற்றுக் குறிப்புகள், திருத்திய ஆவணங்களுக்குத் தனி விதிவிலக்கு வகையை வைத்திருங்கள்.

ஒரு கற்பனை ஒப்பீட்டு உதாரணம்

ஒரு தொழிலின் கொள்முதல் பதிவேட்டில் ITC ₹4,80,000; அதன் GSTR-2B காட்டுவது ₹4,58,000 என்று வைத்துக்கொள்வோம்.

கற்பனை உதாரணம்: கொள்முதல் பதிவேட்டு ITC-யிலிருந்து GSTR-2B வரை
விவரம் தொகை
கொள்முதல் பதிவேட்டின்படி ITC ₹4,80,000
கழிவு: புத்தகத்தில் பதிவான இன்வாய்ஸ், சப்ளையர் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை (₹18,000)
கழிவு: புத்தகத்தில் பதிவான இன்வாய்ஸ், சப்ளையர் தவறான GSTIN பதிவு செய்தார் (₹7,000)
கழிவு: GSTR-2B-இல் கடன் குறிப்பு, புத்தகத்தில் பதிவாகவில்லை (₹5,000)
கூட்டு: GSTR-2B-இல் இன்வாய்ஸ், புத்தகத்தில் பதிவாகவில்லை ₹8,000
GSTR-2B-இன்படி ITC ₹4,58,000

கொள்முதல் பதிவேட்டிலிருந்து தொடங்கினால், புத்தகத்தில் பதிவாகி GSTR-2B-இல் இல்லாத இன்வாய்ஸ் ஒரு கழிவு. GSTR-2B-இல் தோன்றி புத்தகத்தில் இல்லாத இன்வாய்ஸ் ஒரு கூட்டல். நல்ல ஒப்பீடு, எல்லா வேறுபாடுகளையும் கூட்டலாகக் காட்டாமல், இரண்டு திசைகளையும் காட்டும்.

கொள்முதல் பதிவேட்டுக்கும் GSTR-2B-க்கும் இடையிலான நிகர வேறுபாடு ₹22,000. அதன் பின்னால் உள்ள நான்கு விதிவிலக்குகளின் தனி மொத்தம் ₹38,000. செய்ய வேண்டிய வேலை பற்றி நிகர எண் மிகக் குறைவாகவே சொல்கிறது; அதனால்தான் வேலைத் தாளில் நிகர வேறுபாடும், நடவடிக்கை தேவைப்படும் ஒவ்வொரு விதிவிலக்கும் இருக்க வேண்டும்.

பொறுப்பை ஒதுக்குங்கள்

ஒவ்வொரு விதிவிலக்குக்கும் ஒரு பொறுப்பாளர் இருக்கும்போதுதான் ஒப்பீடு பலன் தரும்.

  • கணக்குக் குழு: பதிவு நிலை, பேரேடுகள், ஆதார ஆவணங்கள்
  • கொள்முதல் குழு: சப்ளையருடன் தொடர்பு, வணிக உறுதிப்படுத்தல்
  • GST மதிப்பாய்வாளர்: IMS நடவடிக்கை, ரிட்டர்ன் மீதான தாக்கம், ஆவண ஆதாரம், இறுதி மதிப்பாய்வு
  • நிர்வாகம்: பணப்புழக்கத்தையோ சப்ளையர் முடிவுகளையோ பாதிக்கும் தீராத சப்ளையர் பிரச்சினைகள்

பல மாதங்களாகத் திறந்திருக்கும் விதிவிலக்கை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

பிரிவு 16(4) பொதுவாக ITC கோரும் கால வரம்பை, உரிய நிதியாண்டு முடிந்த பின் வரும் நவம்பர் 30, அல்லது ஆண்டு ரிட்டர்ன் தாக்கல் தேதி, இவற்றில் எது முந்தையதோ அதனுடன் இணைக்கிறது. இந்தக் காலம் நெருங்கியும் தீராத விதிவிலக்குக்கு, முன்னுரிமை மதிப்பாய்வு, சப்ளையர் பின்தொடர்தல், ஆவணப்படுத்திய முடிவு தேவை. பொருந்துமா என்பதை எப்போதும் தற்போதைய சட்டத்துடனும் பரிவர்த்தனையின் உண்மை நிலையுடனும் சரிபாருங்கள்.

கொள்முதல் ஒழுங்கை மேம்படுத்த இந்த வழிமுறையைப் பயன்படுத்துங்கள்

ஒரே சப்ளையரிடமிருந்து மீண்டும் மீண்டும் வரும் வேறுபாடுகள், ரிட்டர்ன் தயாரிப்புப் பிரச்சினை மட்டுமல்ல; தொழில் கட்டுப்பாட்டுப் பிரச்சினை.

சப்ளையர்வாரியான விதிவிலக்குப் போக்குகளைக் கண்காணியுங்கள். ஒரு சப்ளையர் தொடர்ந்து தாமதமாகப் பதிவு செய்தால், தவறான விவரங்களைப் பயன்படுத்தினால், திருத்தங்களைத் தாமதப்படுத்தினால், சப்ளையர் மதிப்பாய்வு, பணம் செலுத்துதல், ஒப்பந்தப் புதுப்பிப்பு பேச்சுகளின்போது அதை எழுப்பலாம்.

ஒப்பீடு உள் இடைவெளிகளையும் காட்டலாம்: செயல்பாட்டுக் குழு பெற்றும் கணக்குக்கு அனுப்பாத இன்வாய்ஸ்கள், கிளை அளவிலான கொள்முதல் பதிவுகள் மையக் குழுவுக்கு வராதது, பொருள் பெற்றதற்கான ஆதாரம் இல்லாதது.

நடைமுறை மாதாந்திரச் சரிபார்ப்புப் பட்டியல்

  • அந்தக் காலத்துக்கான GSTR-2B-ஐப் பதிவிறக்குங்கள்.
  • உரிய இன்வாய்ஸ்களை IMS-இல் பாருங்கள்.
  • ஒப்பீட்டுக்குப் பயன்படுத்தும் கொள்முதல் பதிவேட்டை இறுதி செய்து (freeze) வையுங்கள்.
  • மொத்தங்களை மட்டுமல்ல, ஆவணங்களை ஒப்பிடுங்கள்.
  • ஒவ்வொரு வேறுபாட்டையும் சரியான திசையுடன் வகைப்படுத்துங்கள்.
  • பொறுப்பாளரையும் முடிக்கும் தேதியையும் ஒதுக்குங்கள்.
  • சப்ளையர் பின்தொடர்தலுக்கான ஆதாரங்களை வைத்திருங்கள்.
  • நீண்டகாலம் தீராத விதிவிலக்குகளை, குறிப்பாகப் பிரிவு 16(4) கால வரம்பை நெருங்குபவற்றை, மேலிடத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.
  • திரும்பத் திரும்ப வரும் விதிவிலக்குகளை நிர்வாகத்துக்குத் தெரிவியுங்கள்.

சுத்தமான ஒப்பீடு, ITC-இல் முடங்கியிருக்கும் பணம், சப்ளையர் ஒழுங்கு, கொள்முதல் பதிவுகளின் நம்பகத்தன்மை பற்றிய தெளிவான படத்தை நிர்வாகத்துக்குத் தரும்.

இந்தக் கட்டுரையை நம்பிச் செயல்படும் முன்: உதாரணம் சொந்தமானது, கற்பனைத் தரவுகளைப் பயன்படுத்துகிறது; இது எந்த வாடிக்கையாளரின் வழக்கும் அல்ல. தொகைகள் ஒப்பீட்டின் திசையையும் முறையையும் மட்டுமே காட்டுகின்றன. GST நிலை, IMS நடவடிக்கைகள், ITC தகுதி எல்லாவற்றையும் தற்போதைய சட்டம், இணையதள வழிகாட்டுதல், உங்கள் சொந்த ஆவணங்களுடன் சரிபார்க்க வேண்டும்.

ஆதாரங்கள் (ஆங்கிலத்தில்)

இந்தக் கட்டுரை பொதுத் தகவலுக்கு மட்டுமே; தொழில்முறை ஆலோசனை அல்ல. இதன்படி செயல்படும் முன் தகுதியுள்ள நிபுணரை அணுகுங்கள்.

உங்கள் கணக்குகளை நாங்கள் பார்க்க வேண்டுமா?

உங்கள் நிலையைச் சொல்லுங்கள். ஒரு வேலை நாளுக்குள் தமிழிலோ ஆங்கிலத்திலோ பதில் தருகிறோம்.

சுருக்கமான விளக்கம் திறக்கும்