பின்னால்

வழிகாட்டி · வருமான வரி

TDS-ஐ ஆன்லைனில் செலுத்துவது எப்படி: சலான் ITNS 281N, படிப்படியாக

வரி ஆண்டு 2026-27 முதல் TDS புதிய சலான் ITNS 281N மூலம் செலுத்தப்படுகிறது. இணையதளப் படிகள், பணம் எந்தக் கணக்குக்குச் செல்லும் என்பதைத் தீர்மானிக்கும் நான்கு தேர்வுகள், தவறான சலானைச் சரிசெய்யும் வழி.

பூவராகவன் & கோ, செலவுக் கணக்காளர்கள்செப்டம்பர் 20266 நிமிட வாசிப்புசரிபார்த்தது: செப்டம்பர் 2026

சுருக்கமாக

யாருக்குப் பொருந்தும்: TAN மூலம் TDS அல்லது TCS செலுத்தும் தொழில்களும் பிற பிடித்தம் செய்பவர்களும்

  • 1 ஏப்ரல் 2026 முதல், TDS, TCS இரண்டும் TAN உள்நுழைவிலிருந்து சலான் ITNS 281N மூலம் செலுத்தப்படுகின்றன. பழைய ITNS 281, 31 மார்ச் 2026 வரை பிடித்த வரிக்கு மட்டுமே.
  • முக்கியத் தலைப்பு (major head) பணம் பெறுபவரைப் பொறுத்தது, செலுத்துபவரை அல்ல: ஒரு நிறுவனத்திடமிருந்து (company) பிடித்தால் 0020, மற்ற எல்லோருக்கும் 0021. மாதாந்திரச் செலுத்தலுக்குப் பணம் செலுத்தும் வகை 200-ஐப் பயன்படுத்துங்கள்.
  • இன்னும் அறிக்கையில் பயன்படுத்தாத சலானை TDS இணையதளமான TRACES-இல் திருத்தலாம். ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், அறிக்கையைத்தான் திருத்த வேண்டும்.

வருமான வரிச் சட்டம், 2025, TDS, TCS-க்குப் புதிய சலான் ITNS 281N-ஐக் கொண்டுவந்தது. பழைய ITNS 281 இன்னும் உள்ளது; ஆனால் 1961 சட்டத்தின் கீழ், அதாவது 31 மார்ச் 2026 வரை, பிடித்த வரிக்கு மட்டுமே.

சலான் சில நிமிட வேலைதான். கவனம் தேவைப்படுவது அதில் உள்ள நான்கு தேர்வுகளில். பணம் எந்தக் கணக்கில் வரவாகும் என்பதை அவையே தீர்மானிக்கின்றன. ஒரு தவறு, நீங்கள் உண்மையில் செலுத்திய வரிக்கே, மாதங்கள் கழித்துக் குறைபாட்டு அறிவிப்பாகத் (default notice) திரும்பி வரலாம்.

தொடங்கும் முன்

  • உங்கள் TAN (வரிப் பிடித்தம், வசூல் கணக்கு எண்), அதன் e-filing கடவுச்சொல். மாதாந்திர TDS, PAN (நிரந்தரக் கணக்கு எண்) உள்நுழைவிலிருந்து அல்ல, TAN உள்நுழைவிலிருந்து செலுத்தப்படுகிறது.
  • அந்த மாதத்தின் செலுத்த வேண்டிய TDS கணக்கு, பிரிவு வாரியாகவும் பணம் பெறுபவர் வாரியாகவும் பிரித்து: நிறுவனமா இல்லையா, இந்தியவாசியா இல்லையா. ஒவ்வொரு சேர்க்கைக்கும் தனிச் சலான் தேவை.
  • பணம் செலுத்தும் வழி: நெட் பேங்கிங், டெபிட் கார்டு அல்லது UPI; அல்லது இணையதளத்தில் உருவாக்கிய சலானுடன் RTGS/NEFT அல்லது வங்கிக் கவுண்டர். உங்கள் வங்கி ஆதரிக்கும் வழிகளை இணையதளம் காட்டும்.

படிகள்

  1. incometax.gov.in e-filing இணையதளத்தில் உங்கள் TAN-ஐ பயனர் அடையாளமாகக் கொண்டு உள்நுழையுங்கள்.
  2. e-File, பின் e-Pay Tax சென்று New Payment-ஐத் தேர்ந்தெடுங்கள். கேட்கும்போது வருமான வரிச் சட்டம், 2025, வரி ஆண்டு 2026-27-ஐத் தேர்ந்தெடுங்கள்.
  3. Pay TDS/TCS என்ற ஓடுவைத் தேர்ந்தெடுங்கள்.
  4. பணம் பெறுபவர் நிறுவனமா இல்லையா, இந்தியவாசியா வெளிநாட்டவரா என்று குறிப்பிடுங்கள்.
  5. பணம் செலுத்தும் வகையைத் தேர்ந்தெடுங்கள். சாதாரண மாதாந்திரச் செலுத்தலுக்கு இது 200: TDS/TCS payable by taxpayer.
  6. ஒவ்வொரு கட்டண இனக் குறியீட்டையும் (nature-of-payment code) அதன் வரியுடன் சேருங்கள். வட்டி அல்லது தாமதக் கட்டணத்தை வரிப் பெட்டியில் அல்லாமல் அதற்கான பெட்டியில் போடுங்கள். ஒரு சலானில் 20 குறியீடுகள் வரை சேர்க்கலாம்.
  7. பணம் செலுத்தும் வழியைத் தேர்ந்தெடுத்துச் செலுத்துங்கள்.
  8. சலான் ரசீதைப் பதிவிறக்குங்கள்.

பணம் எங்கே செல்லும் என்பதைத் தீர்மானிக்கும் நான்கு தேர்வுகள்

1. பணம் பெறுபவர் நிறுவனமா?

இணையதளம் கேட்பது பணம் பெறுபவரைப் பற்றி, அதாவது யாரிடமிருந்து பிடித்தீர்களோ அவரைப் பற்றி; உங்களைப் பற்றி அல்ல. ஒரு நிறுவனம் ஆலோசகருக்கான TDS-ஐச் செலுத்தும்போது “நிறுவனம் அல்ல” என்று பதில் தர வேண்டும், ஏனெனில் ஆலோசகர் நிறுவனம் அல்ல. இந்தப் பதிலே முக்கியத் தலைப்பை நிர்ணயிக்கிறது: நிறுவனமாக உள்ள பணம் பெறுபவர்களுக்கு 0020, மற்ற எல்லோருக்கும் 0021. தலைப்பு செலுத்தும் தொழிலைக் குறிக்க வேண்டும் என்று தோன்றுவதால், இதுதான் மிக அதிகம் நடக்கும் குழப்பம்.

2. இந்தியவாசியா, வெளிநாட்டவரா

இந்தியவாசிகளுக்கும் வெளிநாட்டவர்களுக்குமான கட்டணங்கள் தனித்தனிச் சலான்களில், அவற்றுக்கான குறியீடுகளுடன் செல்லும். ஒரு மாதத்தில் இரு தரப்பிடமிருந்தும் வரி பிடித்திருந்தால், இரண்டு சலான்கள் தேவை.

3. பணம் செலுத்தும் வகை

உங்கள் சொந்த மாதாந்திரச் செலுத்தலுக்கு 200-ஐப் பயன்படுத்துங்கள். 400 என்பது, உதாரணமாக ஒரு அறிக்கையைச் செயலாக்கிய பின், உங்கள் TAN மீது வருமான வரித் துறை எழுப்பிய கோரிக்கையை (demand) செலுத்த மட்டுமே. பட்டியலில் உள்ள மற்ற தேர்வுகள் PAN அடிப்படையிலான கோரிக்கைகள், பிற வரவுகளுக்கானவை. வழக்கமான செலுத்தலை 400-இன் கீழ் செய்தால், அது உங்கள் அறிக்கைக்குக் கிடைக்காமல் போகலாம்.

4. கட்டண இனக் குறியீடு

ஒவ்வொரு வகைக் கட்டணத்துக்கும் இப்போது இணையதளம் நிர்ணயித்த நான்கு இலக்கக் குறியீடு உண்டு. பழைய சில பிரிவுகள் பல குறியீடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: தனிநபர் ஒப்பந்ததாரர்கள், மற்ற ஒப்பந்ததாரர்கள்; தொழில்முறைக் கட்டணம், தொழில்நுட்பக் கட்டணம்; கட்டட வாடகை, இயந்திர வாடகை. பட்டியலில் உள்ள விளக்கத்தைப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்; அந்தப் பணம் பெறுபவருக்குக் காலாண்டு அறிக்கையில் நீங்கள் குறிப்பிடும் பிரிவுடன் அது ஒத்துப்போக வேண்டும். வேறுபட்டால், சலான் பொருந்தாதது (unmatched) என்றும், அறிக்கையில் குறைவாகச் செலுத்தியது என்றும் தெரியும்.

பணம் செலுத்திய பின்

  • காலாண்டு அறிக்கைக்குத் தேவையான மூன்று விவரங்கள் ரசீதில் இருக்கும்: வங்கிக் கிளையின் BSR (Basic Statistical Return) குறியீடு, செலுத்திய தேதி, சலான் வரிசை எண். இவை மூன்றும் சேர்ந்ததே சலான் அடையாள எண் (CIN).
  • செலுத்திய தொகையை அந்த மாதத்தின் செலுத்த வேண்டிய TDS கணக்குடன் ஒப்பிட்டு, ரசீதை அந்த மாத ஆவணங்களுடன் வையுங்கள்.
  • தாமதமாகச் செலுத்தியிருந்தால், அறிக்கை தாக்கல் செய்யும் முன் வட்டியைச் செலுத்துங்கள்: பிடித்த தேதியிலிருந்து செலுத்திய தேதி வரை மாதத்துக்கு 1.5%; மாதத்தின் ஒரு பகுதியும் முழு மாதமாகக் கணக்கிடப்படும்.

அடிக்கடி நடக்கும் தவறுகள்

சலானில் அடிக்கடி நடக்கும் தவறுகளும் அவற்றின் விளைவுகளும்
தவறு விளைவு
நிறுவனமா இல்லையா என்பதைப் பணம் பெறுபவரை வைத்து அல்லாமல், செலுத்துபவரை வைத்துத் தேர்ந்தெடுத்தல் சலான் அறிக்கையுடன் பொருந்தாது; குறைவாகச் செலுத்தியதாகக் காட்டும்
வழக்கமான செலுத்தலுக்குப் பணம் செலுத்தும் வகை 400 அந்தப் பணம் அறிக்கையில் பயன்படுத்தக் கிடைக்காமல் போகலாம்
புதிய சட்ட TDS-ஐப் பழைய ITNS 281-இல், அல்லது தவறான வரி ஆண்டில் செலுத்துதல் சரியான ஆண்டின் அறிக்கைக்கு அந்தச் சலானைப் பயன்படுத்த முடியாது
அறிக்கையில் உள்ள பிரிவிலிருந்து வேறுபட்ட குறியீடு வரிகள் பொருந்தாதவையாகக் காட்டும்; குறைபாட்டு அறிவிப்பு வரும்
வட்டி அல்லது தாமதக் கட்டணத்தை வரியாகப் போடுதல் வட்டி செலுத்தப்படாமலேயே இருக்கும்; தொடர்ந்து ஓடும்
மாதாந்திர TDS-ஐ PAN உள்நுழைவிலிருந்து செலுத்துதல் பணம் உங்கள் TAN-உடன் இணையாது; அதனால் உங்கள் அறிக்கை அதைப் பயன்படுத்த முடியாது

சலான் தவறாகிவிட்டால்

  • இன்னும் அறிக்கையில் பயன்படுத்தவில்லை என்றால்: TRACES-இல் (tdscpc.gov.in) ஆன்லைன் சலான் திருத்தம் மூலம் சரிசெய்யுங்கள். ஆண்டு, முக்கியத் தலைப்பு, சிறு தலைப்பு (பணம் செலுத்தும் வகை), கட்டண இனக் குறியீடு எல்லாவற்றையும் மாற்றலாம்; கோரிக்கைகள் வழக்கமாக 24 முதல் 48 மணி நேரத்தில் செயலாக்கப்படும்.
  • ஒரு கட்டணத்தை வெளிநாட்டவர் பிரிவுக்கு மாற்றவோ, அதிலிருந்து மாற்றவோ உங்கள் TDS அலுவலரின் ஒப்புதல் தேவை. இதை ஆன்லைனில் செய்ய முடியாது.
  • ஏற்கனவே அறிக்கையில் பயன்படுத்தியிருந்தால்: திருத்த அறிக்கை (correction statement) தாக்கல் செய்து, அறிக்கையையே திருத்துங்கள்.
  • e-filing இணையதளத்தில் உள்ள “Challan Correction Request”, முன்கூட்டிய வரி போன்ற PAN சலான்களுக்கானது. TAN மூலம் செலுத்திய TDS சலான்கள் TRACES-இல்தான் திருத்தப்படுகின்றன.

உங்களிடம் TAN இல்லையென்றால்: படிவம் 141

சில பிடித்தம் செய்பவர்களுக்கு TAN தேவையில்லை: இந்தியவாசியிடமிருந்து சொத்து வாங்குபவர்; வெளிநாட்டவரிடமிருந்து சொத்து வாங்கும் இந்தியவாசித் தனிநபர் அல்லது HUF (இந்து கூட்டுக் குடும்பம்); வரித் தணிக்கைக்கு உட்படாமல் வாடகை, அல்லது பெரிய ஒப்பந்த, தொழில்முறைக் கட்டணம் செலுத்தும் தனிநபர் அல்லது HUF. இவர்கள், பிடித்தம் செய்த மாதம் முடிந்து 30 நாளுக்குள், தங்கள் PAN உள்நுழைவிலிருந்து படிவம் 141 மூலம் ஒரே படியில் செலுத்தி அறிக்கையும் தருகிறார்கள். வெளிநாட்டவரிடமிருந்து சொத்து வாங்கும் மற்ற எவருக்கும் இன்னும் TAN தேவை. ஒரு கட்டணம் இந்த வகையில் வருமா என்பதை TDS & TCS சரிபார்ப்புக் கருவி (ஆங்கிலம்) சொல்லும்.

இந்தக் கட்டுரையை நம்பிச் செயல்படும் முன்: படிகளும் புலப் பெயர்களும் செப்டம்பர் 2026 நிலவரப்படி வருமான வரித் துறையின் ஆவணங்களைப் பின்பற்றுகின்றன. இணையதளத்தின் திரைகளும் குறியீடுகளும் அவ்வப்போது மாறும்; பணம் செலுத்தும் நாளில் இணையதளம் காட்டுவதைப் பின்பற்றுங்கள்.

ஆதாரங்கள் (ஆங்கிலத்தில்)

இந்தக் கட்டுரை பொதுத் தகவலுக்கு மட்டுமே; தொழில்முறை ஆலோசனை அல்ல. இதன்படி செயல்படும் முன் தகுதியுள்ள நிபுணரை அணுகுங்கள்.

உங்கள் கணக்குகளை நாங்கள் பார்க்க வேண்டுமா?

உங்கள் நிலையைச் சொல்லுங்கள். ஒரு வேலை நாளுக்குள் தமிழிலோ ஆங்கிலத்திலோ பதில் தருகிறோம்.

சுருக்கமான விளக்கம் திறக்கும்